கதைச் சொல்லும் கதை…

பகுதி-4

தெளிந்தும் குழம்பினேன்!

மறுநாள் மெல்ல மெல்லப் பொழுது விடியத்துவங்கியது. அதுவரை உறங்க மறுத்த என் கண்களை மெதுவாக மூடித்திறந்தேன் அப்பாட அப்படியொரு நிம்மதி. கண்களை மூடும்போதுதான் நினைவுக்கு வந்தது அடிப்பட்டவரின் தொலைப்பேசி என்னிடம் இருக்கிறது என்று! வேகமாக வரவேற்பு (reception) அறைக்குச் சென்று அவரது தொலைப்பேசியை சார்ஜ் செய்து ON செய்தேன். மறுகணமே ஒரு அழைப்பு! அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தேன். அடுத்த கணமே என்ன என்னவோ கோபமாக பேசித்தீர்த்தாள் அந்தப் பெண். அதிலிருந்து கண்டுகொண்டேன் அவள் அவரது மனைவியென்று. உடனே நான் உங்களது கணவருக்கு பயங்கரமாக அடிப்பட்டுள்ளது சற்று மோசமான நிலையில் இருக்கிறார் முடிந்தால் விரைந்து வாருங்கள்” என்று நான் சொன்னதும், அதுவரை சடசடவென பெய்யும் மழை போல் பேசியவளின் குரல், சற்று நடுக்கத்துடன் சிறிது தட்டுத்தடுமாறி நீங்கள் யார் என் கணவருக்கு எண்ணவாயிற்று? “ என்று கேட்டது. நடந்ததை விளக்கித் தெளிவாக விலாசம் கொடுத்து அவ்விடத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டேன். ஒரு ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் மருத்துவமனைக்கு வந்தார் அந்தப் பெண். அந்தப் பெண்ணிடம் அவரை ஒப்படைத்து பின்பு, நான் மீண்டும் ஒரு முறை அவரை அனுமதிக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச்(ICU) சென்று பார்த்து விட்டு, மருத்துவமனையை விட்டுப் பிரிய மனமில்லாமல் வீடு திரும்பினேன்.

   வீட்டில் அனைத்து விளக்குகளும் எரிந்தபடியே மின்விசிறிகள் இயங்கிய படியே தொலைக்காட்சியில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அதையெல்லாம் நிறுத்திவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால் 7.00 மணி. நான் 8.30 மணிக்குள்ளாகக் கல்லூரியினுள் இருக்க வேண்டும். இரவு முழுவதும் உறங்காமல் களைத்திருந்தேன். ஆக என்னால் கல்லூரிக்கு போக இயலாது. எனவே ஓய்வு எடுத்துக்கொள்வோம் எனத் தோன்றியது. இருந்தும் கல்லூரிக்கு செல்வோமென்ற மற்றொரு எண்ணம். அதன் பின் அவசர அவசரமாகக் கிளம்பி கல்லூரிக்கு சென்றேன். முதல் பாடவேளை MASS TRANSFER OPERATION. இதன் ஆசிரியர் சற்று கடுமையானவர் ஆனால் நல்லவரும் கூட. அவரையும் எப்படியோ சமாளித்து வகுப்புக்குள் நுழைந்து என் நண்பனின் அருகில் சென்று அமர்ந்தேன். சிறிது நேரம் பாடம் கவனித்தேன். மெல்லமாக என் நண்பன் என்னிடம் நீ வாங்கிய அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்துவிட்டாயா?” என்று கேட்டான். அந்த நொடிப்பொழுதில் சிதற ஆரம்பித்த கவனச் சிதறல் எனை வெகுவாகத் தொற்றிக் கொண்டது. நானே எனக்குள் என்ன என்னவோ எண்ணிக்கொண்டேன். மேலும் எதை எதையோ தொடர்பு படுத்தினேன். அந்த புத்தகத்தினை வாசிக்க ஆரம்பித்த அடுத்த கணப் பொழுதிலிருந்து அதுவரை நடந்த அத்துணையும் என் நினைவுக்கு வந்தது. எப்பொழுது 4.30 மணியாகும்,எப்பொழுது வீட்டிற்குச் செல்வேன் என்று நினைத்துடன், அந்தப் புத்தகத்தை படித்தாக வேண்டும் என்ற ஆர்வமும் சேர்ந்து, என்னைப் பைத்தியம் பிடித்தவன் போல் நடந்து கொள்ளச்செய்தது. என் நண்பர்கள் என்னை வித்தியாசமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். எப்படியோ! அன்றைய பொழுதைக் கடத்தி, வீடு திரும்பும் போது என் நண்பன் தானும் என்னுடன் வருவதாகச் சொன்னான் எனக்கு அவனை வர வேண்டாம் என்று சொல்வதற்கு மனம் இல்லை. எனவே அவனும் என்னுடன் என் வீட்டிற்கு வந்திருந்தான்.

  அன்றிரவு அந்தப் புத்தகத்தை வாசிக்கக் கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். நான் ஏற்கனவே அக்கதையை THE KNOCKED DOOR என்ற அத்தியாயத்தில் பாதியில் நிறுத்தியிருந்தேன். அதைத் தொடரும்போது அந்தக் கதை தடதடவென தட்டப்பட்ட கதவைத் திறந்தேன்! அது எங்கள் தெருவின் காவலாளி அவர்-சார் யாரோ ஒருவர் கையில் சுத்தியலுடன் உங்கள் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டிருந்தார். நான் அவரைத் தடுத்து நிறுத்துவதற்காகச் சத்தம் போட்டேன். அவர் அப்போதும் நிறுத்தவில்லை. நான் மேலும் அருகில் நெருங்க யார் நீ என்று கேட்டுக்கொண்டே வந்தேன். அவர் என்னை முறைத்துக்கொண்டே தொடர்ந்தார். அப்பொழுதில் மின்சாரமும் போனது. நான் எனது TORCH-ஐ எடுத்து அவரை பார்பதற்குள் அவர் எங்கோ மாயமானார். ஒருவேளைத் திருடனாக கூட இருக்கலாம், நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றார். அடுத்ததாக ஒரு இரண்டு நாட்கள் கழித்து என் வீட்டிற்கு ஒரு செய்தி வந்தது அந்தச் செய்தி அந்தக் காவலாளியின் இறப்புச் செய்தி” என்று அந்த அத்தியாயம் நிறைவுற்றது. இதைச் சிறு குழப்பத்தோடு யோசித்தவனாகக் கண்களை மூடினேன் சிறிது சிறிதாகக் கண்கள் சொக்கின. நானும் உறக்கத்தின் மடியில் தலைசாய்த்துக்கொண்டேன். இது எனக்கு நெடுநேரம் நிலைக்கவில்லை. ஆம் உறங்கிக் கொண்டிருந்த என் நண்பன், திடீரென அலறினான்! ஆனால் என்னால் ஏனோ எழுந்திருக்க இயலவில்லை. விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அவன் அலறுவது, என்னை மிகுதியாக அச்சுறுத்தியது. பின்னர் சிறிது நேரத்திலேயே அவன் அலறலை நிறுத்தினான். அதிசயமாக, என் கைகால்கள் அசைப்பதற்குக்கூட சக்தியின்றி செயலிழந்து கிடந்தன. அவ்வேளையில் அதிக சப்தமும் இல்லாமல் மிகக் குறைவான சப்தமும் இல்லாமல் தொடர்ந்து மூன்று முறை டொக்! டொக்! டொக்! என அறையின் கதவு  தட்டப்படுகிறது. என் நண்பன் எழுந்து கதவை திறக்க முற்படுவதை உணர்ந்தேன். பயத்தினில் கதவை திறக்க வேண்டாம் என எச்சரிக்க முயன்றேன். ஆனால் என்னால் எந்த  வார்த்தைகளையுமே பேச இயலவில்லை. மனதில் தோன்றும் வார்த்தைகள் நடுநாவிலே நின்றன. எவ்வளவோ முயன்றும் என்னால் பேச இயலவில்லை. அவன் எழுந்து, கதவை திறந்துவிட்டு மீண்டும் எந்தச் சத்தமும் இல்லாது போய் அமைதியாகப் படுத்துக்கொண்டான். என் கண்களை திறக்க முடியாத போதும் விழித்துப்பார்க்க முயன்று, திறந்தும் திறவாமலும் அரைகுறைப் பார்வையோடு பார்த்தேன். மறு கணமே என்னுயிர் என்னை விட்டுப் போய்விடும் என்று முடிவுக்கு வந்தேன். காரணம், இருண்டு கிடந்த அறையில், நள்ளிரவில் ஜன்னல் வழியாக வந்த நிலவொளி, கண்ணாடியில் பட்டு ஏற்படுத்திய மிக மிக மங்கிய வெளிச்சத்தில் முகம் இல்லாத, சிறிது கூட முகம் தெரியாத ஒரு உருவம் சற்று தூரத்தில் என் எதிரே நின்றது. என் கட்டுப்பாட்டை இழந்த மூச்சு மேலும் கீழுமாக இழுத்தது. கடவுளே! அந்த உருவம் என்னிடம் வரக்கூடாது என்று நான் எண்ணினேன். அந்த உருவம் ஆணா பெண்ணா என்று கூட தெரியவில்லை. அவ்வளவு வழுவாக மூச்சிறைக்கும் அதே சமயம், என் கைகால்களின் நரம்புகள் இழுத்துப் பிடித்துக்கொண்டது. வலி, மிகவும் பொறுத்துக்கொள்ள முடியாத வலி. அதை மரணத்தின் வலியாக நான் உணர்ந்தேன். எனது நாவினை பற்களால் கடித்துக் கொண்டதை உணர்ந்தேன். ஆதலால் முடியாத போதும் மிகப்பொறுமையாக என்னைத் தேற்றிக்கொண்டு, போர்வையினை கடினமாக்கி பற்களுக்கிடையில் வைத்தேன். அந்தப் பயங்கர உருவம் எண்ணருகில் நெருங்குவது போல உணர்ந்தேன். சுமக்க முடியாத பெருஞ்சுமையை சுமார்த்தியது போல இருந்தது. அச்சுறுத்தும் அச்சமயத்தில் இதயம் படபடத்ததில் மூச்சுத் திணறி, கண்கள் கனத்துக்கொண்டன. என் வாழ்கையிலே முதல் முதலாகத் தாங்கமுடியாத மரண வலியால், என் கண்கள் கலங்கியது. அதன் பின் கண்களைத் திறக்க முயற்சிக்கவில்லை. இறுதியாக நான் உறங்கினேனா இல்லை மயங்கிவிட்டேனா என்றுகூட எனக்குத் தெரியாது. பொழுது விடிந்தது! அன்றைய நாள் ஞாயிற்றுக் கிழமை. உண்மையில் இந்தக் கதையில் நடப்பது எதாவது எனது வாழ்வில் நடக்கிறதா என்று சந்தேகித்தேன்! இல்லை இல்லை அப்படியெல்லாம் இருக்காது என்று புலம்பினேன்! மறுநாள் காலை என் நண்பனிடம் “நேற்று இரவு நீ எதற்கு கதவை திறந்தாய்! நான் உன்னை அவ்வளாவாக அழைத்தும் நீ அதை கண்டுகொள்ளவே இல்லை! என்றேன் அதற்கு நானா! நான் நேற்று இரவு நன்றாக தூங்கினேன். யாரும் எந்த கதவையும் தட்டவில்லை நான் கதவை திறக்கவும் இல்லை என்றான். என்னால் எதையுமே நம்ப முடியவில்லை. அன்றுமுதல், என்னை நானே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளப் பயந்தேன்! என் நிழலே எனக்கு என்னை அச்சுறுத்தும் பேயாக மாறுவதுபோல் தோன்றியது. சிந்தித்துப் பாருங்கள் ஒருவேளை நம் நிழலே நமக்குப் பேயானால் நம்மால் என்ன செய்ய முடியும்? இதை நான் நன்கு உணர்ந்தேன். இருட்டைக்கண்டு நடுங்கினேன். தனிமையைத் தவிர்த்தேன். அப்பொழுதுதான் ஒன்றை யோசித்தேன். நிச்சயமாக என் வீட்டுக் கதவை தட்டியது அந்தக் காவலாளியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்லால் அவர் என்னிடம் ஏதோ சொல்ல வந்திருக்கிறார். என்ன சொல்ல வந்திருப்பார்? நிஜத்தில் எனக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா? அப்படி இருந்தால் அது எதற்காக? இதற்கெல்லாம் பதில் அந்தக் காவலாளி. ஒரு வேளைக் கதை உன்மையானால் இப்பொழுது அந்தக் காவலாளிக்கு ஆபத்து. இதையெல்லாம் எண்ணியபடி இருந்த என் இமைக்கா நொடிகளுக்குப் பதில் சொல்ல விரைந்தேன் மருத்துவமனைக்கு. ஆனால்… அங்கு நடந்தது என்னை உறையவைத்தது…!  ஆமாம் தெளிந்தும் குழம்பியிருந்தேன்!

என்னதான் நடந்தது? தெரிந்து கொள்ள, இன்னும் சற்றே தூரம் என்னுடன் பயணித்து வாருங்கள் நண்பர்களே!

உங்கள் அனைவரையும் எதிர்பார்த்திருப்பேன் எனது அடுத்த பதிவில்…

 

பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் பிடித்திருந்தால் விருப்பம் தெரிவையுங்கள்,பகிருங்கள்,உங்கள் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!

If you love the content do add like, to stay tuned follow us and do cherish us with your comments.

 

 

 

 

Advertisements

கதை சொல்லும் கதை…

பகுதி-3

திறந்த கதவு தொடர்ந்த மர்மம்!  


  அதிர்ந்து கொண்டிருந்த கதவின் தாழினை சிறிதுதான் திறக்க முற்பட்டேன், என் முன் பட்டாரென்று இதுவரை இல்லாத ஒரு பயங்கர சத்தம். அந்தச் சத்தத்திற்குப்பின் கதவு தானாக திறந்தது. வெளியில் தெரிந்த வெளிச்சம் எதுவும் இப்போது இல்லை. மிகப்பொறுமையாக என்னை நானே தேற்றிக்கொண்டு கைப்பேசியின் விளக்கை ஒளிரச்செய்தேன். சுற்றும் முற்றும் பார்த்தேன், மயான அமைதி. என்றும் இல்லாத இந்த அமைதி எனக்குள் இன்னும் பயத்தை முடுக்கியது. நான் எனக்குள்ளே புலம்பினேன் என்ன இது? மிகுந்த சத்தம் கேட்கிறது திறந்தால் ஒன்றுமே இல்லை! அதிக சத்தமும் பயமுறுத்துகிறது, இப்படியான நிசப்தமும் என்னைப் பயமுறுத்துகிறது, ஒன்று இங்கிருந்து நான் வேறெங்காவது செல்ல வேண்டும், இல்லை என் பெற்றோர்களை உடனடியாக இங்கு வரச்செய்ய வேண்டும் என்று புலம்பியபடி தரைக்கு ஒளியைத் திருப்பினேன். அங்குச் சேறு படிந்த காலடித்தடம். இரண்டு மூன்று அடிகள் தெரியும் வரை விளக்கைத் தூக்கிப்பிடித்தேன். இதுவரை பயத்தில் படபடத்து மௌனமாய் இருந்த என் மனம் சொன்னது இத்துடன் நிறுத்திக்கொண்டு, அறைக்கு உள்ளே செல்வது நல்லது என்று. வீட்டின் நுழைவாயில் கதவு திறந்தபடியே முன்னும் பின்னும் ஒலியெழுப்பியபடி ஆடிக்கொண்டிருந்தது. ஆனால்   தூரத்தில் அந்தக் காலடிகள் கடந்த தடத்தை கவனிக்கையில் அங்கு ஒற்றைக்காலணி ஒன்று மட்டும் தெரிந்தது. அருகிலிருந்த Hockey Stick-ஐ கையில் எடுத்தேன். எனது காலணிகளை கழற்றி ஓரம் தள்ளிவிட்டு, தொலைப்பேசியை Silent mode க்கு மாற்றினேன். காற்றில் மிதப்பதைப் போல் மெல்ல மெல்ல நடந்து சென்று அந்தக் காலணிக்கு அருகில் சென்றேன். அந்தக் காலணியை கையில் இருந்த Hockey Stick-ஆல்  இழுத்தேன். அதன் அருகில் விசில் ஒன்றும் கிடந்தது. சுற்றும் முற்றும் பார்த்தபடியே, மிகுந்த எச்சரிக்கையுடன் என் உடலை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு தரையில் கிடக்கும் அந்த விசிலை எடுக்க முற்பட்டேன். அங்கும் இங்கும் தரையை தடவியபடி அந்த விசிலை எடுக்க முற்பட்ட எனது கைகளுக்கு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. சட்டென்று கையை எடுத்துக்கொண்டு அந்தப் பக்கம் தொலைபேசியைத்திருப்பினேன். அங்கு நெட்டுக்குத்தாக தரையில் விழுந்து கிடந்த உருவத்தைப்பார்த்து அலரியடித்து தரையோடு தரையாக  ஒரு மூன்று அடி நகர்ந்து தூணில் சென்று மோதினேன். அது யாருமில்லை எங்கள் தெருவின் இரவு காவலாளி. கைகால்கள் மெதுவாக அசைந்ததைக்கண்டு அவர் இன்னும் இறக்கவில்லை, உயிர் ஊசலாடுகிறது என்பதில் தெளிவாகினேன். கவிழ்ந்து கிடக்கும் அவரைத்திருப்பி கண்ணத்தில் இரண்டு தட்டு தட்டியபடி “அண்ணா அண்ணா” என்று அழைத்தேன். அவர் பதில் பேசும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்தேன். வேகமாகத் தண்ணீர் கொண்டுவந்து அவரது முகத்தில் தெளித்து அவரைச் சுயநினைவுக்கு கொண்டு வர எண்ணினேன். இருந்தும் பயனேதும் இல்லை. என் மொபைல் சார்ஜ் 15% என்பதைச் சத்தமிட்டுக்கொண்டு எச்சரிக்கை செய்தது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் நான் என்ன செய்வேன்?. அவரை சோதனைச்செய்தேன். அவரது கையில் Tourch ஒன்று இருப்பது என் கண்களுக்கு தெரிந்தது. ஒழுங்காக அது எரியாத போதும், எனக்கு வேறு வழியின்றி அதைக் கையில் எடுத்துக்கொண்டு, எனது மொபைல் Swithch Off ஆவதற்குள் மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தேன். எனது அழைப்பும் அவர்களுக்கு எட்டியது. 30 நிமிடம் பொறுத்திருக்கும் படி அவர்களிடமிருந்து பதில் வந்தது. என் மொபைல் –ஐ Super power mode-க்கு மாற்றினேன்.

  அவர்கள் சொன்ன நேரம் கடந்தும் மருத்துவ ஊர்தி வரவில்லை. மீண்டும் மருத்துவ ஊர்தியை அழைத்தேன், அப்பொழுது “சார் குறுக்கு வழி தடை பட்டுள்ளது, ஏற்கனவே இங்கு ஒரு லாரி கார் விபத்து இதில் ஒரு குடும்பத்திற்கே இறப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் எதுவும் நுழைவதற்கு இடமில்லாமல் இருக்கிறது. நாங்கள் விரைந்து வருவதற்கு முயற்சிக்கிறோம் என்று பதில் அளித்த அவர் இப்போது மீண்டும் என்னிடம் வந்து சேர வேண்டிய விலாசத்தைக் கேட்டார். நானும் அவருக்கு முகவரியை தெரியபடுத்திவிட்டு,பொறுத்திருந்தேன். முன்பு  கை கால்கள் அசைத்துக்கொண்டிருந்தவர் அப்பொழுது ஏதோ முனகிக்கொண்டிருந்தார். அவரது தலையில் நான் போட்டிருந்த கட்டை மீறி இரத்தம் கசிந்தது. முனகிக் கொண்டிருந்த அவர் எதாவது பேசுவாரா என்று அவரிடம் பேச்சுக்கொடுத்துப்பார்த்தேன் அவர் அந்த நிலையில் இல்லை. எனக்கு அவர் இறந்து விடுவாரோ என்ற எண்ணம் தொற்றிக்கொண்டது. ஒரு 5 நிமிடத்திற்குப் பிறகு அவரது முனகலும் நின்று கைகால் அசைவுகளும் ஓய்ந்தன. எனக்கு இன்னும் படபடப்பு கூடியது. மீண்டும் மருத்துவ ஊர்தியை அழைத்தேன் அவர் அழைப்பை ஏற்கவே இல்லை.  “வாகனம் வரும் என்று எதிர்பார்த்தால் நாமே இவரை கொன்றுவிட்டதற்கு சமம், இவரை எப்படியாவது மருத்துவமனையில் கொண்டுசேர்க்க வேண்டும்” என்று யோசித்துக்கொண்டு என் வீட்டு நுழைவாயிலுக்கு ஓடிச்சென்று சாலையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பார்த்தேன், அந்த சாலை, ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  அவரைச் சாலை வரைக்கும் எப்படியாவது கொண்டுவந்தால் யாராவது உதவுவார்கள் என்று எண்ணியபடி அவரைத் தூக்க முற்பட்டேன். அவரது கனத்தை என்னால் தூக்க முடியவில்லை. அவரது கால்களை பிடித்து இழுத்தால் அவரது தலையில் இன்னமும் அடிபடுகிறது, ஆகவே எனது கைகளைக்கொண்டு அவரை அனைத்தபடி இழுத்தேன். அந்த கணப்பொழுதில் அவரைப் பார்க்கும்போது பாவமாகத்தான் இருந்தது. நான் வேறு என்ன செய்வது? அவரைத் தரையோடு தரையாக தரதரவென இழுத்தபடியே நுழைவாயிலை நெருங்கினேன்.

   மீண்டும் இறுதியாக ஒருமுறை மருத்துவ ஊர்தியை அழைத்துப்பார்போம் என்று தோன்றியது. அழைத்தேன். அதற்கு அந்த ஓட்டுநர், “நீங்கச் சொன்ன முகவரியில் அப்படி யாரும் இல்லை, நாங்கள் பொறுத்திருந்து, பின் அங்கிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டதற்கு இப்படியொரு முகவரியே கிடையாது என்று சொன்னார் அதனால் நாங்கள் திரும்பிவிட்டோம் “ என்றனர். நான் அவரிடம் இன்னும் ஒருமுறை முகவரியைச் சரிபார்க்க கேட்டுக்கொண்டேன். முகவரியெல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் மீண்டும் வருவதற்கு மறுத்தபோது, எனக்குக் கோபம் தலைக்கேறி “சார் அவர் எந்த அசைவுமற்று கிடக்கிறார் உங்களுக்கு இதைப் புரியவைக்கும் நிலமையில் நான் இல்லை என்று சத்தம் போட்டுக் கத்தினேன், பிறகு என்னை நானே அமைதிப்படுத்திக்கொண்டு நிலமையை அவர்களுக்குப் புரியவைக்க முயற்சித்தேன். ஒருவழியாக அவர்கள் பாதி தூரம் மட்டும் வருவதற்கு ஒப்புக்கொண்டனர்.

   ஏதாவது வாகனம் கிடைக்குமா? அல்லது யாராவது உதவிக்குத்தான் வருவார்களா? என்று எண்ணித் தடுமாறிய வேளையில், வெகு நேரம் கழித்து, தொலைவில் ஒரு ஆட்டோ சத்தம் கேட்டது. எப்படியாவது அவர் எனக்கு உதவ வேண்டும் என்று இருந்த அத்துணை தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு அந்த ஆட்டோவை எதிர்பார்த்தபடி நின்றிருந்தேன். அந்த ஆட்டோவும் வந்தது. என் பிரார்த்தனை வீண்போகாதபடி அவரும் உதவ முன்வந்தார். ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது எனது தொலைப்பேசியை பார்த்தேன். என் மொபைல்-இல் 8தவறிய அழைப்புகள் இருந்தன. நான்தான் இதை சரியாக கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு, ஆட்டோ ஓட்டுநரிடம் “அண்ணா சற்று வேகமாகச் செல்லுங்கள்” என்றேன். அதற்கு அவரும் “சரி தம்பி” என்று கூறி, ஆட்டோவை விரைவாகச் செலுத்தினார்.

   சற்று தூரத்தில் மருத்துவ ஊர்தி ஒன்று நின்றிருந்தது தெரிந்தது. ஆமாம் அது எங்களுக்காகத்தான் காத்திருந்தது. அதில் அவரை ஏற்றி, நானும் அதில் ஏறி அமர்ந்தேன். வாகனம் மருத்துவ மனைக்கு விரைந்தது. போகும் வழியில் அந்த மருத்துவ ஊர்தியின் ஓட்டுநர் என் அலைப்பேசிக்கு அழைப்பு விடுத்திருந்ததாகச் சொன்னார்.அப்போதுதான் புரிந்தது அந்த தவறிய அழைப்புகள் அனைத்தும், இவரிடம் இருந்துதான் வந்திருந்தது என்று. பதற்றத்தில் சரியாகக் கவனிக்கவில்லை என்று காரணம் சொல்லி, கோபப்பட்டதற்கு மன்னிப்புக்கேட்டேன். அவர் அதற்கு எதுவும் பேசவில்லை. சற்று நேரத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்தோம். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க விரைந்தனர். அந்தக் காவலாளியின் தலையில் பலத்த காயத்தாலும், மிகுந்த இரத்தபோக்கினாலும் மருத்துவர் அவரது நிலை சற்று கவலைக்கிடம் தான் என்று தெரிவித்தார்.

     அதன் பின் நான் வீட்டிற்குக் கிளம்புவோம் என்று நினைத்தேன். ஆனால் அவரைத் தனியே விடுவதற்கும் மனமில்லை, நான் தனியாக வீட்டிற்குச் செல்வதற்கும் துணிவில்லை, அவர் ஏன் என் வீட்டிற்கு வந்தார்? அங்கு வந்து எப்படி அடிபட்டுகிடந்தார்? அப்போது என் வீட்டுக் கதவை தட்டியது யார்? எதற்காகத் தட்டப்பட்டது?  இவருக்கும் நடந்த நிகழ்விற்கும் சம்பந்தம் என்ன? என்ற கேள்விகளும் என்னை விடவில்லை.  இதற்கு விடை அவர்தான் சொல்லவேண்டுமென்று அவரின் விழிப்புக்காக, இமைக்க மறுத்த என் விழிகள் விழித்துக்கொண்டே இருந்தன. நீங்களும் விழித்துக்கொண்டிருங்கள் அவர் விழிக்கும்வரை…….. பொறுத்திருப்போம் அடுத்த பதிவிற்காக…..

கதை சொல்லும் கதை…

 பகுதி-2

“தட்டப்பட்ட கதவு”


  பேருந்து தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருந்தது. உறக்கத்திலிருந்த நான் சற்றேவிழித்துக்கொண்டேன். வெண் பனிமூட்டம், லேசான தூறல், தொடர்ந்து வீசும் காற்று, சிறிது குளிரும் கூட . இரசனை இல்லாதவர்கள்தான் இதை இரசிக்காமல் இருந்திருப்பார்கள். ஆனால் அப்படியாரும் அங்கில்லை. காரணம், அனைவரின் விழிகளும் அவ்விடத்தின் அழகை இரசித்தபடியே சொக்கி நின்றது. நாங்கள் சுற்றித்திரிந்து, ஆடிப்  பாடி ஒரு வழியாக அந்த இரண்டு நாட்கள் எங்கள் இமைப்பொழுதில் ஓடியது போல ஒரு அனுபவம். ஆம்! அன்று மூன்றாவது நாள். இறுதியாக Park ஒன்றுக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டது. அதன் படியே அவ்விடத்திற்குச் சென்றிருந்த எங்களின் ஆட்டம் பாட்டம் அங்கும் குறைவிலாது போனது. முடிவாய் அங்கிருந்த கடைகளில் எல்லோரும் நினைவுக்கொன்றாய் பிடித்ததையும் புதியதையும் வாங்க, என் கவனம் மட்டும் அந்த புத்தககடை மீது விழுந்தது. அந்தக் கடைக்காரர் வியாபாரத்திற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்துணை வித்தைகளையும் செய்து கொண்டிருந்தார். அவரைக் கவனித்தபடியே ஒவ்வொரு புத்தகமாக பார்த்துக் கொண்டிருந்த என்னை, அந்த வரிசையில் இருந்த ஒரு புத்தகம் மட்டும் அதை வாங்குமளவு என் உள்ளுணர்வைத் தூண்டியது. நான் வேறெதுவும் வாங்கவில்லை, அந்தப் புத்தகம் ஒன்றைத்தவிர. அங்கிருந்தே அதை    வாசிக்கத்துவங்கிவிட்டேன். பக்கத்திற்குப்பக்கம் சுவாரஸ்யங்களும், திருப்பங்களுமாக இருந்த அந்தப் புதினம், என் வாசிப்பின் ஆர்வத்தை தட்டியெழுப்பியது. நானும் அதுவரை அப்படியொரு புத்தகத்தை படித்ததில்லை. எனக்குப் புத்தகம் வாசிப்பதும், கதைகள் எழுதுவதும் மிக மிகப் பிடித்த விஷியம் . நான் என்ன கதை எழுதுகிறேன் ?  இதுவல்லவா கதை! இவர்தான் மிகச்சிறந்த ஆசிரியராக இருக்கமுடியும் என்று எனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டேன். பின் படிக்க படிக்கத்தான் தெரிந்தது இந்தப் புத்தகத்தை ஆசிரியர் கையாண்டுள்ள விதம் மிகவும் மாறுபட்டிருந்தது. காரணம் அது சற்று மனோதத்துவத்துடனும் தொடர்பு பெற்றிருந்தது. இதைப் படித்துக்கொண்டே வந்த எனக்கு எங்கள் இருப்பிடம் வந்ததே தெரிவில்லை. சரியாக ஒரு 7 மணியளவில் போதையில் தள்ளாடிய என் நண்பர்கள் சிலரோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அந்த மங்கிய இரவுப்பொழுதில் என் நண்பன் ஒருவன் அவர்களின் உளறலைச் சமாளித்துக்கொண்டு அவரவர் வீட்டில் கொண்டு சேர்த்தான். வீட்டின் நுழைவாயிலைத் திறந்து, முன் கதவைத்திறந்து பார்த்த எனக்கு, ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பெரிதாக ஒன்றுமில்லை. வீடு முழுவதும் தண்ணீர். என் அறையைத்தவிர எங்குப் பார்த்தாலும் பாதம் மூழ்கும் வரைத்தண்ணீர். தூரத்தில் வீட்டின் ஒரு மூலையில் தொடர்ந்து தண்ணீர் ஓடுகிற சப்தம். யாராலும் எப்போதுமே பயன்படுத்தப்படாத அந்தக் குழாய் இணைப்பில் அன்றுதான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் ஒரு அரை மணி நேரத்திற்கு முன் தான் யாரோ திறந்து விட்டது போல. நெடுநேரம் முயற்சித்தும் என்னால் தண்ணீரை நிறுத்த முடியவில்லை. காரணம் குழாய் இணைப்பு சிறிது சேதமாகியிருந்தது. எப்படியோ ஒருவழியாகத் திருகித்திருகித் துணி ஒன்றைக் குழாயோடு இணைத்துக்கட்டிய பிறகுதான் சற்று தண்ணீர் நின்றது. இருந்தும் அது சொட்டுச்சொட்டாக விழும் சத்தம் என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. என் அறையில் மட்டும் எந்த ஈரமும் இல்லை. ”நல்லவேலை” என்று நினைத்துக்கொண்டு அறைக்குள் சென்று கட்டிலில் சற்று சாய்வாக அமர்ந்தேன். திடீரென்று அலார ஒலி! அந்தப் பொழுதில் அது என்னை எரிச்சலூட்டியது. அதை Off செய்துவிட்டு லேசாக இமைகள் மூடினால், அந்தப் பெரியவரின் சந்திப்பு மீண்டும் என் நினைவுக்கு வந்தது. சரி தூக்கம் வரும் வரை எதையாவது செய்வோமென்று, அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிப்பைத் துவங்கினேன்.

  அட! இந்த ஆசிரியர் பற்றி எதுவுமே தெரியவில்லையே, என யோசித்துக்கொண்டு, Chapter II ” THE KNOCKED DOOR “ என்பதை வாசித்த நான் பேரதிர்ச்சியால் உறைந்ததுடன் அதிர்ந்து போனேன்.  காரணம் அந்தக் கதை, என் வீட்டிற்குள் நுழைந்தேன். அப்போது யாருமே பயன்படுத்தாத குழாயில் தண்ணீர் வழிந்து என் அறையைத்தவிர வீடெங்கும் நீர் நிறைந்திருந்தது அதைச் சரிசெய்து விட்டு படுக்கைக்குச் சென்றேன் திடீரென தலைவலிக்கும் அளவில் மிகச் சப்தமாக அலாரம் ஒலித்துத் தானாக நின்றது. அப்போது தடதடவென என் அறையின் கதவு தட்டப்பட்டது” என்று துவங்கியது …….. இந்த வரிகளைப் படித்து முடிக்கும் முன், என் கதவு உடையும் வண்ணம் தட தடாவெனத் தட்டும் சத்தம். நான் இதுவரை அப்படியொரு பயத்தை எதிர்கொண்டதில்லை. தொடர்ந்து கதவு தட்டப்பட்டுக்கொண்டே இருந்தது. பயத்தில் என் கை கால்கள் உதறின, வார்த்தைகளும் புரியவில்லை, என் நா வறண்டு, இதயம் வெளியே வந்துவிடும் போலத் துடித்தது. திடீரென்று மீண்டும் அலாரம், என் மூச்சு நின்றேவிட்டது. அந்த அளவு சப்தத்தை எழுப்பிக்கொண்டு கீழே விழுந்தது. தலைவலி தாங்க முடியவில்லை. தலையின் பின்புறத்தோடு சேர்த்துக் கைகளை இறுக்கி என் செவிகளை மூடினேன். ஒரு 10 நொடிகளில் தானாக நின்றது. இது நின்ற அடுத்த கணமே கதவு தட்டப்படுவது துவங்கியது. மெல்ல ஒரு மூன்று அடிகள்தான் எடுத்து வைத்திருப்பேன். பட்டென்று மின்சாரம் போனது. விழுந்துக்கெட்டு,தட்டுத் தடுமாறி என் மொபைலை கையில் எடுத்து பயத்தில்  என் முகத்தில் வெளிச்சத்தைக் காண்பித்தேன். நேரம் சரியாக 11.55 .வறண்ட நாவில் வராத எச்சிலை விழுங்கியபடி, மெல்ல மெல்ல நடந்து கதவை நெருங்கினேன். வெளியில் மட்டும் ஏதோ வெளிச்சம் தெரிவதை தாழின் துவாரத்தில் பார்த்தேன்……அதிர்ந்து கொண்டிருந்த கதவின் தாழினை சிறிதுதான் திறக்க முற்பட்டேன், என் முன் பட்டாரென்று இதுவரை இல்லாத ஒரு பயங்கர சத்தம்……. ஆம் ஆனது என்ன? தாழ் திறக்கப்பட்டதா? பொறுத்திருங்கள்!..


 

கதை சொல்லும் கதை…

பகுதி-1


 அனைவருக்கும் என் இனிய வணக்கம். உண்மை சம்பவங்களையும் எனது கற்பனையும் சேர்த்து எனது முதல் கதையாக தொகுத்துள்ளேன் .இந்தக் கதை வாசகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 நேரம் 12.59 நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறேன். யாரோ என் வீட்டைச் சுற்றி சுற்றி ஓடுகிற காலடி சத்தம், திரும்பத் திரும்ப என் பெயரையே அழைக்கின்ற குரல், சற்று அல்ல அதிகமாகவே எனக்குப் பயம்.கதவைத் திறக்க முன்நோக்கிச் செல்கிறேன்….,பட்டாரென்று என் அறையின் கதவு உடைபடுகிறது. விழித்துக்கொண்டேன். அந்தக் கனவில் கண்ட பட படப்பு இன்னும் போகவில்லை. ஆனால் பயம் போய்விட்டது. படுக்கையிலிருந்து எழுந்திருக்க எனக்கு மனமில்லை. எழுந்து சிறிது நேரம் அமர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் எனவும் தோன்றுகிறது. விருப்பமில்லாமல் போர்வையை விலக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தேன். ஏதோ ஒரு கோபத்தில் இரவு உணவு எடுத்துக்கொள்ளத் தவிர்த்தேன், அதனால் சற்று பசி. கைக்கெட்டும் தொலைவில் ஒரு packet Biscuit.என் இடுப்புவரை போர்வையை போர்த்தியபடி அமர்த்துக்கொண்டு பாதி சாப்பிட்டேன். நான் கனவில் கண்ட காட்சி கண்களை மூடும்போதெல்லாம் வந்து போகின்றது, என்ன செய்வது சே,……….. என்று சலித்துக்கொண்டு, ஒரு சில அடிகள் எழுந்து நடந்து முகம் கழுவிக்கொள்ள போனேன். தண்ணீரைத் திறந்து கைகளில் நிரப்பி முகத்தில் அறைந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். பார்த்தவுடன் எனக்கு இன்னும் தூக்க மயக்கம் தெளியவே இல்லை என்று புரிந்தது. மீண்டும் சிறிது தண்ணீரைக் கொண்டு முகம் கழுவிக்கொண்டு, ஈர முகத்துடன் நடந்தேன். வெளியில் மழை, சரிவர மின்சாரம் இல்லை, கீழே எட்டிப்பார்த்தால், என் வீட்டு நுழைவாயில் தாண்டிய விளக்கு மட்டும் அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தது. இப்போது வீட்டிலும் எந்த விளக்கும் எரியவே இல்லை. அந்த கருமிருட்டில் வழி இதுவாகத்தான் இருக்க வேண்டும் என யூகித்துக்கொண்டு அறையை நோக்கி நடக்க, மேஜையின் மீதிருந்த தண்ணீர் தம்ளரை தட்டிவிட்டுவிட்டேன். அந்த அமைதியான இரவில் என் காலடி சத்தத்துடன் இந்த தம்ளர் சத்தமும் சேர்ந்துகொண்டது. நான் அந்த இடத்தைக் கடந்து வந்தும் அது வெகு நேரமாக உருண்டுகொண்டே இருக்கிறது. அறையை நோக்கி வருகின்ற இடத்தில் ஒன்றன்பின் ஒன்றாகத் தட்டிவிட்டுக்கொண்டே வந்தால் அனைத்தும் அடங்கியும், அந்த தம்ளர் மட்டும் உருண்டுகொண்டே இருக்கிறது. பளிச்சென்ற வெளிச்சம் ஆம் மின்சாரம் வந்து விட்டது. இப்போது நேரம் ஒரு மணி 4 நிமிடம். அப்பாடா என்று உருண்டுகொண்டிருந்த தம்ளரை எடுத்துவைக்கப் போனேன். போன ஆர்வத்தில் கால் இடிபட்டு, வலியோடு வந்து பார்த்தால் காலில் இரத்தம்.எனக்கு நானே கட்டுபோட்டுக்கொண்டு அந்தத் துணியை வெட்டக் கத்தரிக்கோல் தேட அதுவும் கிடைக்காததால் கத்தியால் வெட்ட அந்தக் கத்தி என் விரலையும் பதம் பார்த்து. இரண்டிற்கும் கட்டுபோட்டுக்கொண்டு அமைதியாக வந்து மெதுவாகக் கண்களை மூடினேன்.

கதவை உதைக்கின்ற சத்தம், இதோ வருகிறேன் என்று எழுந்து கதவை திறந்தேன். அப்போதுதான் நினைவிற்கு வந்தது, அன்று காலை எங்களுக்குச் சுற்றுப்பயணம்[industrial visit IV]இரண்டு பேருந்துகள் நிற்கின்றன, அனைவரும் எங்களுக்காக வெகு நேரமாகக் காத்திருக்கின்றனர். அவர்கள் பார்ப்பதை பார்த்துக்கொண்டு “மானம் போகிறது” என்று எண்ணிக்கொண்டு நானும் என் நண்பனும், எங்கள் இருவரை எழுப்பியவனும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பேருந்து மலையேறத் துவங்குகிறது. ஆடலுமில்லை பாடலுமில்லை என்ற ஓட்டுநர் கட்டளை. அவரது கட்டளை அரச கட்டளையாயிற்றே. இவ்வளவு நேரம் ஆடியவர்களெல்லாம் அமைதியாக வந்து அமர்ந்தார்கள். வெளியில் பார்த்தால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நல்ல சூழ்நிலை, என் ஊரைப்போலவே இருந்தும் கவனித்துக்கொண்டே வந்தேன்.மலையேறிய பேருந்து இப்போது ஒரு இடத்தில் நிற்கிறது,,,,…இறங்கிச் சுற்றி சுற்றிப்பார்தேன். பாஷை புரியாத மனிதர்கள்….தொலைதூரத்தில் ஒரு பெரியவர் பாதங்கள்கொண்டு பாதையை அளந்தபடி மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறார்.

99px_ru_photo_298405_chelovek_v_plashe_s_kapushonom_stoit_v_tumannom (1)

நான் ஏதோ தர்மவான் போல எனை எண்ணிக்கொண்டு, அவருக்கு யாசிக்க ரூபாய்களைத் தேடினேன். அதுவும் அகப்படவில்லை. அதற்குள் அவர் என் அருகில் வந்துவிட்டார். என்னிடம் வந்து ஏதாவது கேட்டுவிடுவாரோ என்ற எண்ணம் எனக்குள். மாறாக “ நேரம் என்ன 12.59 ஆ”எனக்கேட்டார். நான் எனது mobile ஐ பார்த்துவிட்டு ஆமாம் என்றேன். பின்பு சிறிது நேரம் கழித்து இப்பொழுது மணி என்ன 1மணி4 நிமிடமா என்றார். நான் மீண்டும் ஆமாம் என்றேன். பேருந்து கிளம்பியது,,,..அவர் கேட்ட தொனியும் சரியில்லை, அவர் பார்வையும் சரியில்லை, ஜன்னலை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தேன். அவர் சடாரேன்று தன் கையிலிருந்த தம்ளரை கீழே போட்டுவிட்டு கையிலிருந்த biscuit ஐ மென்றபடி பேருந்தை பார்துகொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்தும் பாராதது போல் வேகமாகத் தலையை உள்ளிழுத்துக்கொண்டேன். பேருந்து நகர்ந்தது. திரையில் ஓடிய படம் அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. கண்களை மூடினால் அந்தப் பெரியவர் சந்திப்பு எதிரில் தோன்றுகிறது. செவிகளில் அந்த தம்ளர் சத்தம், அதை எங்கேயோ கேட்டது போன்ற எண்ணம். இதையெல்லாம் நினைத்து நானே சிரித்து கொண்டேன். சிரித்துக்கொண்டேன் என்பதை விட, சிரித்துக் கொண்டு மனதைத் தேற்றிக்கொண்டேன் என்பதுதான் உண்மை. காரணம் அவருக்கும் அவர் கேட்ட கேள்விக்கும், நமக்கும் எதாவது சமந்தமா???என்று எனை நானே குழப்பிக்கொண்டேன். இருந்தும் இதையெல்லாம் மறக்க முயற்சித்து லேசாக இமைகள் மூடி தூக்கம் கொண்டு என் விழிகளை நிரப்பினேன்…….

விடியும்வரை பொறுத்திருங்கள்….